ஜெர்மனி, ஸ்காட்லாந்து,
சுவிட்சர்லாந்து நாடுகளை சேர்ந்த மூன்று
விஞ்ஞானிகளுக்கு, வேதியியலுக்கான,
இந்தாண்டின் நோபல் பரிசு வழங்கப்பட
உள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டு விஞ்ஞானி, ஜேக்கஸ் டுபோசெட், ஜெர்மனி விஞ்ஞானி, ஜோக்கிம் பிராங்க்,
ஸ்காட்லாந்து விஞ்ஞானி, ரிச்சர்டு ஹெண்டர்ஸன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து, நுண்ணிய மூலக்கூறுகளை
பார்க்க உதவும், ’கிரையோ - எலக்ட்ரான்
மைக்ரோஸ்கோபி’ கருவியை கண்டுபிடித்தனர்.
மிக நுண்ணிய மூலக்கூறுகளை, உயிரிகளை, எலக்ட்ரான் கதிர்களை
பயன்படுத்தி, புகைப்படம் எடுக்க, இந்த கருவி உதவுகிறது. இதன் மூலம், உயிரி மூலக்கூறுகளை,
முப்பரிமாணத்தில் பார்க்கவும், படம் பிடிக்கவும் முடியும்.
உயிரி மூலக்கூறுகளை உறையச் செய்து, அவற்றை, மிகத் தெளிவாக பார்க்க
உதவும், இந்த அரிய கண்டுபிடிப்பு, மருத்துவத் துறைக்கு சிறந்த வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.
நோய்களை உண்டாக்கும் வைரஸ்களின் செல் அமைப்புகளை, கிரையோ - எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபி மூலம், மிகத் தத்ரூபமாக பார்க்க முடிவது, சிறப்பு.
பிரேசிலில், ஓராண்டுக்கு முன், பச்சிளம் குழந்தைகளின் மூளையை பாதித்து,
அவர்களை செயலிழக்கச் செய்வது, ஜிகா வைரஸ் என, மருத்துவர்கள் சந்தேகித்தனர். அப்போது, ஜிகா வைரசின் உள் கட்டமைப்பை அறிந்துகொள்ள, கிரையோ - எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபி கருவியே உதவியது.
வேதியியல் துறையில் பிரமிக்கத்தக்க
கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ள, ஜேக்கஸ் டுபோசெட்,
ஜோக்கிம் பிராங்க், ரிச்சர்டு ஹெண்டர்ஸன்
ஆகியோர், இந்தாண்டின், வேதியியலுக்கான நோபல் பரிசுக்கு உரியவர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்;
ஏழு கோடி ரூபாய் பரிசை, அவர்கள், சமமாக பகிர்ந்து கொள்வர்.