கல்வெட்டுகளும் செப்பேடுகளும் இலக்கியங்களும் பழங்கால வரலாற்றை அறிய உதவும் காலக் கண்ணாடிகள். ஆனால், ஒரு நாட்குறிப்பானது, அக்கால நிகழ்வுகளை நமக்கு தெளிவாக எடுத்துரைக்கும் வரலாற்று ஆவணமாக திகழ்கிறது. அது தான் ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு.

நிகழ்ந்த மிகச் சிறந்த நிகழ்வுகளின் பதிவாக அமைந்ததனால் தான் ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு ஓர் இலக்கியமாகவும் வரலாற்று ஆவணமாகவும் மதிக்கப்பெறுகிறது.

ஆனந்தரங்கர், சென்னை பெரம்பூரில் 1709-ம் ஆண்டு மார்ச் திங்கள் 30-ம் நாள் பிறந்தார்.

ஆனந்தரங்கர் கல்வி கற்றபின்னர், பாக்குக் கிடங்கு நடத்தி வந்தார். அச்சமயம் அரசுப் பணிகள் சிலவற்றில் தந்தைக்கு உறுதுணையாக இருந்து வந்தார். துய்ப்ளெக்சு என்னும் ஆளுநரின் மொழிபெயர்ப்பாளர் ( துபாசி) இறந்ததனால், பன்மொழியறிவு பெற்ற ஆனந்தரங்கர் அப்[பணிக்கு நியமிக்கப்பட்டார்.

ஆனந்தரங்கர்  பணியாற்றிய காலத்தில், 1736-ம் ஆண்டு முதல் 1761-ம் ஆண்டு வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார்.
தம் நாட்குறிப்புக்கு தினப்படி செய்திக்குறிப்பு, சொஸ்தலிகிதம் என்று பெயரிட்டார். இடையில் சில நாள் எழுதப்படாமலும் சில நாள் குறிப்புகள் முழுமையின்றிக் காணப்பட்டாலும் இருபத்தைந்து ஆண்டுக் கால அரசியல், பொருளாதார, சமுதாய நிகழ்ச்சிகளின் பதிவேடாக அது அமைந்துள்ளது

வரலாற்று செய்திகள், அரசியலமைப்பு, நிர்வாகமுறை, பிரெஞ்சுப்படை காரைக்காலை பிடிக்க சென்று தோல்வியடைந்தது. தில்லியின் மீது பாரசீகப் படையெடுப்பு , குற்றவாளிகளுகுக் கடுமையான தண்டனை வழங்கிய செய்திகள், இலபூர்தொனே கப்பல் பிரெஞ்சு நாட்டிலிருந்து சென்றது, வெளிநாட்டுப் பயணிகள் வந்து சென்ற நிகழ்வுகள்  முதலிய முதன்மையான வரலாற்று செய்திகள், ஆனந்தரங்கரின் நாட்குறிப்பில் இடம் பெற்றுள்ளதால் அது வரலாற்று கருவூலமாகத் திகழ்கிறது.

ஆனந்தரங்கர்  நாட்குறிப்பின் பெரும்பகுதி வாணிகச் செய்திகளையே விவரிக்கின்றன. துறைமுக நகரங்களில் வாழும் மக்களின் வருவாய்க்கு அடிப்படையாய் அமைவது அங்கு வரும் கப்பல்களின் போக்குவரத்தே. கப்பல் வரும் போது வாணிகம் செழிப்பதும் மக்கள் மகிழ்வதும் இயற்கை. அதேபோன்று கப்பல் வராத காலத்து மக்கள்  வசதிகள் குன்றுவதும் துன்புறுவதும் இயற்கை. இதனை ஆனந்தரங்கர்  தன்னுடைய நாட்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

பிரெஞ்சுக்காரர்களுக்கும் இந்திய மன்னர்களுக்கும் இடையே பாலமாக இருந்தவர் ஆனந்தரங்கர் .முசபர்சங், ஆனந்தரங்கருக்கு 1749-ம் ஆண்டு மூவாயிரம் குதிரைகளை வழங்கி , அவருக்கு மன்சுபேதார் என்னும்  பட்டதையும் வழங்கினார்.பின்பு, செங்கற்பட்டு கோட்டைக்கு தளபதியாகவும்,  அம்மாவட்டம் முழுமைக்கும் ஜாகீர்தாரராகவும் நியமனம் பெற்றார்.

துபாஷி பணியாற்றுவோர் தமிழ் மக்களின் தலைவராக அறிவிக்கபடுவர். எனவே, ஆனந்தரங்கர் வணிகராக, துபாசியாக இருந்தபோதிலும் மன்னரைப் போல மதிக்கபெற்றார்.

துய்ப்ளே ஆட்சியில் ஆனந்தரங்கருக்குத்  தனிப்பட்ட உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன. ஆளுநர் மாளிகைக்குள் பல்லக்கில் செல்லும் உரிமை அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு செல்லும் போது மங்கள ஒலிகள் ஒலிக்கும். அவர்,  தங்கப்பிடி  போட்ட கைத்தடி வைத்துக்கொள்ளவும் செருப்பணிந்து ஆளுநர் மாளிகைக்குள் செல்லவும் உரிமை பெற்றிருந்தார். பொதுமக்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கும் உரிமையும் அவருக்கு இருந்தது.
பன்மொழி புலவராக திகழ்ந்தாலும் ஆனந்தரங்கர் தமிழ்மொழி மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார். தமிழிலேயே கையெழுத்திட்டார். உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் முன்னோடியாக திகழ்ந்த பெப்பிசு என்பாரை போன்று தமிழில் நாட்குறிப்பு எழுதியமையால், இவரை இந்தியாவின் பெப்பிசு எனவும், நாட்குறிப்பு வேந்தர் எனவும் போற்றுகின்றனர்.

தம்முடைய வாழ்கையை பிறருக்கு முன்மாதிரியாக அமைத்துக்கொண்ட ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு ஓர் இலக்கியமாகவும்  வரலாற்று ஆவணமாகவும் பண்பாட்டு பதிவேடாகவும் உலகத்தாரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவர்தம் நாட்குறிப்பு குறித்து பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

ஆனந்தரங்கர் குறித்து வெளிவந்துள்ள இலக்கியங்கள்:
ஆனந்தரங்கக் கோவை - தியாகராச தேசிகர்
ஆனந்தரங்கன் தனிப்பாடல்கள், கள்வன் நொண்டிச் சிந்து,   ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ் - அரிமதி தென்னகன்
ஆனந்தரங்கர் புதினங்கள், ஆனந்தரங்கர்  விஜயசம்புசீனிவாசக்கவி
ஆனந்தரங்கர்  ராட்சந்தமு - கஸ்தூரிரங்கக்கவி
 
Top