தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தங்கள் மேற்கொள்ள கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கிராம நிர்வாக அலுவலர் பதவி உள்பட பல்வேறு குரூப் 4 பதவிகளுக்கான 9351 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 20 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதற்கான இணையவழி விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித்தகுதி, தொழில்நுட்ப தகுதி உள்ளிட்ட சில விவரங்களை அவர்களே மாற்றிக் கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டிருந்தது. இதற்கும் டிசம்பர் 20-ஆம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டிருந்தது. 

எனினும், சில விண்ணப்பதாரர்கள் தங்களது பிறந்த தேதி, பாலினம், ஜாதி, ஆதரவற்ற விதவை, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகளுக்கான தகவல் ஆகியவற்றை விண்ணப்பத்தில் தவறுதலாக தெரிவித்துள்ளதாகத் தெரிவித்து அதனை மாற்றக் கோரி மனு அனுப்பியுள்ளனர்.

எனவே, தகவல் விவரங்களில் மட்டும் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமெனில், இணையதளத்திலிருந்து படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு ஜனவரி 10-ஆம் தேதிக்குள் அஞ்சல் மூலம் மட்டுமே தேர்தவாணைய அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். மின்னஞ்சல் மூலம் பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


 
Top