பிறந்த தேதி 13.02.1879
பிறந்த ஊர் ஹைதாராபாத்
பெற்றோர் அகோர்நாத் சடோபத்யாயா - பரத சுந்தரி
கணவர் முத்யாலா கோவிந்தராஜுலு நாயுடு
இறப்பு 02.03. 1949

இவரது தந்தை அகோர்நாத் சடோபத்யாயா விஞ்ஞானியும் தத்துவவியலாளரும் கல்வியாளராகவும் விளங்கினார். இவர் நிஸாம் கல்லூரியின் நிறுவனர் ஆவார்.

இவரது தாய் பரத சுந்தரி ஒரு பெண் கவிஞர் ஆவார்

கல்வி
12 ஆவது வயதில் சரோஜினி நாயுடு அவரது மெட்ரிகுலேஷன் பரீட்சையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்றார்.அவர் மாநில அளவில் முதலிடம் பெற்றார்.

1891 முதல் 1894 வரை அவர் தன்னுடைய படிப்பில் சிறு இடைவெளி விட்டு, பல்வேறு தலைப்பிலான புத்தகங்களைப் படித்தார்.

1895 ஆம் ஆண்டு, பதினாறு வயதில் முதன் முதலாக நிஜாம் அறக்கட்டளையின் உதவித்தொகையில் லண்டனிலுள்ள கிங்ஸ் கல்லூரி மற்றும் கேம்பிரிட்ஜ் கிர்டன் கல்லூரியில் மூலம் படிப்பதற்காக சென்றார்.

உருது, தெலுங்கு, ஆங்கிலம், பாரசீகம், பெங்காலி ஆகிய மொழிகளைப் பேச சரோஜினி நாயுடு கற்றுக்கொண்டார். அவருக்கு பிடித்தமான கவிஞர் பெர்சி பைஷ் ஷெல்லி ஆவார்.

திருமணம்
இங்கிலாந்தில் தங்கியிருந்த போது தனது 17 வயதில் முத்யாலா கோவிந்தராஜுலு நாயுடு என்ற ஒரு பிராமணர் அல்லாத தொழில்ரீதியான ஒரு மருத்துவரை சந்தித்து, அவரைக் காதலித்து தனது 19வது வயதில் திருமணம் செய்து கொண்டார்.

1898 ஆம் ஆண்டு சட்டப்படி சென்னையில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். சாதியிடை திருமணங்கள் அனுமதிக்கப்படாத காலகட்டத்தில் அவரை திருமணம் செய்து கொண்டார். அதற்கு முற்போக்கு சிந்தனையுள்ள அவரது தந்தையின் ஒப்புதலும் கிடைத்தது. அவரது திருமண வாழ்கை மகிழ்ச்சிகரமானதாக இருந்தது.

ஜெயசூர்யா, பத்மஜா, ரந்தீர், லீலாமணி என அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். பின்னர் அவரது மகள் பத்மஜா மேற்கு வங்காளத்தின் ஆளுனர் ஆனார்.

அரசியல் வாழ்க்கை
 
  இந்திய சுதந்திர போராட்டம்:

1905 ஆம் ஆண்டில் வங்காளம் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். 1903-17 காலகட்டத்தில் சரோஜினி அவர்கள் கோபால கிருஷ்ண கோகலே, ரபீந்திரநாத் தாகூர், முகம்மது அலி ஜின்னா, அன்னி பெசண்ட், சி.பி.ராமஸ்வாமி ஐய்யர், காந்திஜி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் அறிமுகத்தைப் பெற்றார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து தண்டி யாத்திரையில் ஈடுபட்டார். காந்தி, அப்பாஸ் தியாப்ஜி மற்றும் கஸ்தூரி பாய் காந்தி ஆகியோர் கைதுக்குப் பின் தர்சண சத்தியாகிரகத்தில் துடிப்புடன் பங்கேற்றார்.

1915 முதல் 1918 ஆண்டுகளுக்கிடையில் அவர் இந்தியா முழுவதும் இளைய சமுதாயத்தினரின் நல்வாழ்வு, பணியாளர் நலன், பெண் கொடுமை மற்றும் தேசியப் பற்று குறித்து பல்வேறு சொற்பொழிவுகளை மேற்கொண்டார்.

ஜவகர்லால் நேருவை 1916 ஆம் ஆண்டு சந்தித்ததற்குப் பின் அவர் சம்பரன் இன்டிகோ பணியாளர்கள் பிரச்சினையைக் கையில் எடுத்தார். 1925 ஆம் ஆண்டில் அவர் காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவிக்கு தேந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவரே ஆவார்.

காந்திஜி அவர்களின் ஒத்துழையாமை இயக்கத்தில்   முதலில் இணைந்தவர் சரோஜினி நாயுடு ஆவார்.

ஜுலை 1919 ஆம் ஆண்டு சரோஜினி அவர்கள் இங்கிலாந்திற்கான ஹோம் ரூல் லீக்கின் தூதர் ஆனார்.

ஜுலை 1920 இல் அவர் இந்தியாவிற்கு திரும்பினார். ஆகஸ்ட் 1 அன்று மகாத்மா காந்தி அவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார். 1924 ஆம் ஆண்டு, கிழக்கு ஆப்பிரிக்க இந்திய காங்கிரசில் பங்கேற்ற இரண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர்களுள் ஒருவராக சரோஜினி அவர்கள் திகழ்ந்தார்.

அக்டோபர் 1928 ஆம் ஆண்டு நாயுடு நியூ யார்க்கிற்கு சென்றார். அங்கு நிலவிய ஆப்ரிக்க அமெரிக்க மற்றும் அமெரிக்க இந்திய இனப் பாகுபாடுகளைக் கண்டு கவலையுற்றார். அங்கிருந்து திரும்பிய பின்னர் காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினரானார்.

ஜனவரி 26, 1930 இல் தேசிய காங்கிரஸ் பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து சுதந்திரம் கோரியது. மே 5, அன்று மோகன் தாஸ் காந்தி கைது செய்யப்பட்டார். அதன் பின் சில நாட்களிலேயே நாயுடு அவர்களும் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். காந்தி அவர்களுடன் ஜனவரி 31, 1931 இல் அவர் விடுதலை செய்யப்பட்டார். அந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டனர். மோசமான உடல் நிலை காரணமாக நாயுடு உடனடியாகவும் காந்தி 1933 ஆம் ஆண்டும் விடுதலை செய்யப்பட்டனர்.

1931 ஆம் ஆண்டு அவர் காந்திஜி மற்றும் பண்டிட் மாலவியாஜி ஆகியோருடன் இணைந்து வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்றார்.

அக்டோபர் 2, 1942 ஆம் ஆண்டு அவர் வெள்ளையனே வெளியேறு போராட்டம் காரணமாக கைது செய்யப்பட்டார். அவர் காந்திஜியுடன் 21 மாதங்கள் சிறையில் இருந்தார். மோகன் தாஸ் காந்தி அவர்களுடன் சரோஜினி நாயுடு அவர்கள் ஒரு பாசமான உறவினைக் கொண்டிருந்தார். காந்தி அவரை செல்லமாக "மிக்கி மவுஸ்" என்று அழைப்பார்.

1947 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஆசிய உறவுகள் மாநாட்டில் நாயுடு பங்கேற்றார்.

இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு அவர் யுனைட்டட் ப்ரொவின்சஸ் (தற்போது உத்தரப்பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது) ன் ஆளுனராக பதவியேற்றார். இதன் வழியாக இந்தியாவின் முதல் பெண் ஆளுனரானார்.

கவிதைத் துறை

அவரது முக்கிய பங்களிப்பும் ஆர்வமும் கவிதை துறையில் இருந்தது.

1905 ஆம் ஆண்டு அவரது முதல் பாடல்கள் தொகுப்பு தி கோல்டன் த்ரெஷோல்டு என்னும் பெயரில் வெளியிடப்பட்டது.

அவரது படைப்புகள்:

  • தி கோல்டன் த்ரெஷோல்டு (1905)
  • தி பேர்டு ஆஃப் டைம்: சாங்க்ஸ் ஆஃப் லவ், டெத் அண்டு தி ஸ்பிரிங்(1912)
  • தி புரோக்கள் விங்: சாங்க்ஸ் ஆஃப் லவ், டெத் அண்டு தி ஸ்பிரிங்(1917)
  • தி ஸ்கெப்ட்ரெட் ஃப்ளுட்: சாங்ஸ் ஆஃப் இந்தியா(1928)
  • தி ஃபெதர் ஆஃப் டான்(1961)
  • தி கிஃப்ட் ஆஃப் இந்தியா
 
Top