இயற்பெயர் __ ரோலிஹ்லாஹ்லா மண்டேலா
காலம் - 18 .07. 1918 - 06.12.2013
தந்தை - காட்லா ஹென்றி மாகனிஸ்வா
பிறந்த ஊர் – தென் ஆப்பிரிக்காவில் பிரிட்டீஷ் ஆதிக்கத்தில் இருந்த டிரான்ஸ்கி என்ற மலைப்பகுதியிலுள்ள மெசோ என்ற குக்கிராமம்.
படிப்பு - மெதடிஸ்ட் மிஷனரி சர்ச் பள்ளி; போர்ட் ஹரே கல்லூரி.
கறுப்பர் இனத்தில் தெம்பு என்ற பிரிவை சேர்ந்தவர் மண்டேலா.
ஆரம்பத்தில் தென் ஆப்பிரிக்காவில் க்சோசா என்ற தனி நாட்டை உருவாக்குவதையே வாழ்க்கை லட்சியமாக கொண்டிருந்தார் மண்டேலா .
அவர் ஹாரே கல்லூரியில் சட்டம் படித்தார். அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போதே அவருக்கு போராட்டங்களில் ஆர்வம் பிறந்தது.
ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியில் இளைய சமுதாயம் கை ஓங்க முக்கிய காரணமானவர் வால்டர் சிசிலு. அவர் தான் மண்டேலாவை விடுதலை போரில் இறக்கியவர். சிசிலு கட்டளைப்படி மண்டேலா இயங்க ஆரம்பித்தார்.
சட்டப்படிப்பை மண்டேலா முடிக்கக்கூட இல்லை அதற்குள் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியில் தனி இளைஞர் பிரிவை சிசிலு உட்பட சிலர் துவக்கினர். இது தான் பெரும் புரட்சிக்கு வித்திட்டது.
சுவெட்டோவில் வக்கீலாக பணிபுரிந்த போது கறுப்பின நர்ஸ் எவ்லின் டோகோ மசே என்ற பெண்ணை மணந்தார். அவர்களுக்கு நான்கு ஆண் , ஒரு பெண் குழந்தை பிறந்தது.
அரசியலில் தீவிரமாக இருந்ததால் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை ஏற்ப்பட்டது. அரசியலுக்காக மனைவியை விவாகரத்து செய்தார் .
1958- ல் நாம்சோமா வின்ப்ரெட் மடிகேசிலா என்ற வின்னியை மண்டேலா மணந்தார். மருத்துவ சமூக சேவை புரிந்த வந்த வின்னி மண்டேலாவை விட 14 வயது சிறியவர்.
1961 – ல் மண்டேலா தலைமையிலான போராட்டத்தில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் 69 பேரை போலீசார் சுட்டு கொன்றனர்.
இந்த சம்பவம் தான் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை கொரில்லா போரில் ஈடுபடும் கட்டாயத்துக்கு தள்ளியது. இது தான் மண்டேலாவின் வாழ்க்கையில் திருப்புனையாக அமைந்தது.
இந்த கொரில்லா படையின் தலைவராக ஆனார் மண்டேலா . அவரை ஒடுக்க வெள்ளையின ராணுவம் பெரும் முயற்சியில் இறங்கியது.தேச துரோக வழக்குகள் அவர் மீது பாய்ந்தன. சதி செய்ததாக அவர் மீது வழக்கு போடப்பட்டு, ரிவோனியா கோர்ட்டில் கைதியாக நிறுத்தப்பட்டார்.
வெள்ளையின ஆதிக்கத்துக்கு எதிராக போராடுகிறேன் ; கறுப்பின ஆதிக்கத்தையும் நான் ஆதரிக்கவில்லை. எங்களுக்கு இந்த நாட்டில் எல்லோருக்கும் சம அதிகாரம் வேண்டும்; அமைதி தவழ வேண்டும் என்பது தான் நீதிபதி அவர்களே என நான்கு மணி நேரம் வாதிட்டார் மண்டேலா .
இறுதியில் மண்டேலா மற்றும் மற்றும் ஏழு பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
44 வயதில் சிறைக்கு போனவர் 1990 ஆம் ஆண்டு தனது 77 வயதில் தன் மனைவி வின்னியுடன் சிறையிலிருந்து வெளியே வந்தார்; 1994 -ல் முழு விடுதலை பெற்று ஜனநாயக தேர்தலில் அதிபரானார்.
1999-ல் மீண்டும் நடந்த தேர்தலில் போட்டியிட மறுத்து ஆட்சியை துறந்தார்.
இந்தியாவுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தவர் மண்டேலா. காந்தியின் கொள்கைகளை பின்பற்றியதால் இவர் தென் ஆப்பிரிக்க காந்தி என அழைக்கப்பட்டார். மண்டேலா விடுதலை ஆனதும் அவருக்கு பாரத ரத்னா அளித்து மத்திய அரசு கௌரவித்தது. இந்தியாவை அல்லாத ஒருவர் பாரத ரத்னா விருது பெற்றது இதுவே முதன் முறையாகும்.
எப்போதும் சத்தியம், அகிம்சை பற்றியே பேசும் மண்டேலா, அதையே தன் போராட்டங்களிலும் கடைபிடித்தார். மண்டேலாவுக்கு 1993 -ல் நோபல் பரிசு அளிக்கப்பட்டது. அந்த ஆண்டில் தான் தென் ஆப்பிரிக்காவில் காந்தி நினைவகத்தை மண்டேலா திறந்து வைத்தார்.
தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையரின் இனவெறி, நிறவெறிக்கு எதிராக போராடியவரும், கறுப்பின மக்கள் சுதந்திர காற்றை சுவாசிப்பதற்காக போராடிய கறுப்பின தலைவர் 06.12.2013 அன்று இயற்கை எய்தினார்.