எம். எஸ். சுப்புலட்சுமி
பிறப்பு:16. 09 1916 ; மதுரை
பெற்றோர்: சண்முகவடிவு அம்மாள், சுப்ரமணிய அய்யர்.
துணை கல்கி சதாசிவம்.
பணி :கர்நாடக இசைப்பாடகிஇறப்பு 11,12.2004;சென்னை,
பிறப்பும், குடும்பப் பின்னணியும்
தேவதாசி குலத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர் மதுரை சண்முகவடிவு அம்மாளுக்குப் பிறந்தார்.
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்பதன் சுருக்கமே எம். எஸ். சுப்புலட்சுமி ஆகும்.
இவர் தம் சகோதரர் சக்திவேல், சகோதரி வடிவாம்பாள் ஆகியோருடன் இசை தொடர்பான சூழலில் வளர்ந்தார்.
இவரது தாயார் சண்முகவடிவு போன்றே வடிவாம்பாள் வீணை மீட்டுவதில் ஆர்வம் மிக்கவர்.
சுப்புலட்சுமியின் பாட்டியார் அங்கம்மாள் ஒரு வயலின் கலைஞர்.
இசை ஆர்வம்
சுப்புலட்சுமிக்கு அவரது தாயாரே முதலில் குருவானார்
இந்துஸ்தானி இசையை இவர் பண்டித நாராயணராவ் வியாசியிடமிருந்து கற்றார்.
செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், முசிறி சுப்பிரமணிய ஐயர், செம்பை வைத்தியநாத பாகவதர், ராஜ மாணிக்கம் பிள்ளை, டி. என். ராஜரத்தினம் பிள்ளை, பாலக்காடு டி. எஸ். மணி ஐயர், ஜி. என். பாலசுப்பிரமணியம் போன்ற இசையுலக முன்னோடிகள் இடம் பெறும் இசை நிகழ்ச்சிகளை சிறுவயதிலேயே நேரில் சென்று சுப்புலட்சுமி ரசித்ததும் உண்டு.
அப்துல் கரீம்கான் மற்றும் பாதே குலாம்கானின் இசையையும் இவர் இரவு நேரங்களில் ரசிப்பதுண்டு.
1926ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு எல்.பி இசைத்தட்டில் "மரகத வடிவும் செங்கதிர் வேலும்" எனும் பாடலை சண்முகவடிவின் வீணையும், எம். எஸ். சுப்புலட்சுமியின் பாடலும் இணைந்து வெளிவந்தது. எம். எஸ். சுப்புலட்சுமியின் முதலாவது இசைத்தட்டு இதுவாகும்.
மிருதங்க ஜாம்பவான் எனப் புகழப்பட்ட புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப்பிள்ளை தொடக்க காலத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியின் வளர்ச்சிக்கு மிக்க உதவியாக இருந்தார்.
அவரது மணிவிழாவில் எம். எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரி நடைபெற்றது.
1935ம் ஆண்டில் நடைபெற்ற இந்தக் கச்சேரி, எம். எஸ். சுப்புலட்சுமியின் இசைத் திறனை வெளியுலகம் அறியச் செய்தது. அதே ஆண்டு மைசூர் சமஸ்தானத்தில் அப்போதைய மைசூர் மகாராஜாவின் அரசவையில் திருக்கோகர்ணம் ரங்கநாயகி அம்மாள் மிருதங்கத்துடன் எம். எஸ். சுப்புலட்சுமி கச்சேரி செய்தார்.
அது முதற்கொண்டு தென்னிந்தியாவின் எல்லா ஊர்களிலும் எம். எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரிகள் நடைபெற்றன.
சினிமாவினுள் பிரவேசம்
“சேவாசதனம்" படத்தின் கதாநாயகியாக நடித்தார்..
அதனைத் தொடர்ந்து காளிதாசனாரின் சகுந்தலை படத்தில் சுப்புலட்சுமி கதாநாயகியாக நடித்துப் புகழ் பெற்றார்.
"மீரா திரைப்படத்தின் வரவேற்பும், சமூக சேவைகளும்
சதாசிவம் மனைவியின் இசையை பக்தி மார்க்கத்துக்குத் திருப்ப முயன்றார். பக்த மீரா எனும் திரைப்படம் 1945 இல் வெளியிடப்பட்டது.
இப்படம் அற்புதமான பாடல்கள் நிறைந்தது. "காற்றினிலே வரும் கீதம்", "பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த", "கிரிதர கோபாலா", "எனது உள்ளமே" போன்ற பாடல்கள் இன்னமும் அனைவரது செவிகளிலும் ஒலிக்கின்றன.
பக்த மீரா இந்தி மொழியில் தயாரிக்கப்பட்டு, வட நாட்டவருக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது அரசியல் பிரமுகர்கள் இந்தியாவின் ஆளுநர் மவுண்ட்பேட்டன் பிரபு தம்பதியினர், பிரதமர் ஜவஹர்லால் நேரு, கவியரசு சரோஜினி நாயுடு ஆகியோரின் நட்பும் அறிமுகமும் சதாசிவம் தம்பதியினருக்கு ஏற்பட்டது.
இந்தி மீராவைப் பார்த்த பிரதமர் நேரு "இசையின் இராணிக்கு முன்னால் நான் சாதாரண பிரதமர் தானே" எனப் பாராட்டினார்.
இந்தியில் வெளியான மீரா பஜன்கள் இந்தி ரசிகர்களிடையே சுப்புலட்சுமிக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தந்தது.
அதே போல கேதாரி நாத்திலிருந்து கன்னியாகுமரி வரையான பக்தர்களையும் இவரது ஆன்மீகக் குரல் பரவசப்படுத்தியது.
1944 இல் நான்கு இசை நிகழ்ச்சிகள் நடத்தி இரண்டு கோடி ரூபாய் வரை நிதி திரட்டினார். மனைவியின் குரலை பொதுநலத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற சதாசிவத்தின் எண்ணமே இதற்குப் பின்புலமாக அமைந்தது.
இந்நிதி மருத்துவம், அறிவியல், ஆராய்ச்சி, கல்வி மற்றும் சமயத்தொண்டு ஆகியவற்றுக்காக செலவிடப்பட்டது.
விருதுகள்
பல்வேறு அமைப்புகள் இவருக்கு பல விருதுகளை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளன. அவையாவன:
- பத்ம பூசண் - 1954
- சங்கீத நாடக அகாதமி விருது - 1956
- சங்கீத கலாநிதி - 1968
- இசைப்பேரறிஞர் விருது - 1970
- மக்சேசே பரிசு - 1974
- பத்ம விபூசண் - 1975
- சங்கீத கலாசிகாமணி விருது - 1975
- காளிதாச சன்மான் - 1988
- நாட்டு ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி விருது - 1990
- பாரத ரத்னா – 1998
முடிவுரை
"இந்தியா இந்த தலைமுறையில் ஓர் மாபெரும் கலைஞரை உருவாக்கியுள்ளது என்பதில் நீங்கள் பெருமிதம் கொள்ளலாம்" என புகழ் பெற்ற கர்நாடக சங்கீத மேதை எம். எஸ். சுப்புலட்சுமியைப் பற்றி சரோஜினி நாயுடு ஒருமுறை கூறினார்
இந்தியாவின் அந்த மாபெரும் கலைஞருக்கு இந்தியாவின் உயர்ந்த விருதான பாரதரத்னா விருதும் வழங்கப்பட்டது.