மூலிகைகள் என்றாலே பலரும் கிடைத்தற்கரிய ஏதோ ஒரு பொருளன்று; இவை நமக்கு அருகிலேயே எளிதில் கிடைப்பன; மருத்துவ பயன் மிக்கன; பின்விளைவுகள் ஏற்படுத்தாதவை.
துளசி
வீடு, தோட்டம், நந்தவனங்களில் எளிதில் காண கிடைக்கும் மூலிகை இது.
துளசி இலைகளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஆவிபிடித்தால் மார்புச்சளி, நீர்க்கோவை, தலைவலி நீங்கும்.
இவற்றின் இலைகளை எலுமிச்சை பழ சாற்றுடன் அரைத்து போட படை நீங்கும்.
விதைகளைப் பொடி செய்து ஒன்று அல்லது இரண்டு கிராம் அளவு உண்டால் உடற்சூடு, நீரெரிச்சல்  அடங்கும்.
கீழக்காய்நெல்லி
வேறு பெயர்கள்: கீழாநெல்லி, கீழ்வாய்நெல்லி
மஞ்சட்காமாலைக்கு எளிய மருந்தாக பயன்படுகிறது.
கீழாநெல்லி இலைகளை கற்கண்டுடன் சேர்த்து சாப்பிட சிறுநீர்த் தொடர்பான நோய்கள் நீங்கும்.
தூதுவளை
தோட்டங்களிலும், வேலி ஓரங்களிலும் இயல்பாக வளரும் ஒரு வகை கொடி.
வேறு பெயர்கள்: தூதுளை, சிங்கவல்லி, ஞானபச்சிலை
இதன் இலைகளை  நல்லெண்ணையில் சமைத்த உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சுவாசகாசம் அகலும்.; இளைப்பு, இருமல் நீங்கும்.
குரல் வளத்தை மேம்படுத்தும்; வாழ்நாளை நீடிக்கும்.

Click here to download TNPSC MASTER Android app

குப்பைமேனி
நச்சுக்கடிகளுக்கு நல்ல மருந்து.
இலைகளை காயவைத்து பொடியாக்கி  பூசினால் படுக்கை புண் குணமாகும்.
குழந்தைகளின் வயதுற்கேற்ற அளவில் உண்ணக்கொடுத்தால்  மலப்புழுக்கள் வெளியேறும்; வயிறு தூய்மையாகும்; பசியை  தூண்டும்.
இலைகளுடன் மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்து பூசினால் சொறி, சிரங்கு நீங்கும்.
மேனி துலங்க குப்பைமேனி என்பது பழமொழி.

கற்றாழை
கற்றாழையில் பலவகையுண்டு. அவற்றுள் சோற்றுகற்றாழையே மருந்தாக பயன்படுகிறது.
வேறுப் பெயர்: குமரி
கற்றாழையின் சோற்றுப் பகுதியை எடுத்து நல்லெண்ணையில் இட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து வர முடி வளரும்; இதனால் நல்ல உறக்கம் வரும்.
மஞ்சள் சேர்த்து காயம்பட்ட இடத்தில் பூசினால் காயம் குணமாகும்.
பசும்பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் மூலச்சூடு குறையும்.
கருப்பை சார்ந்த நோய்களை நீக்குவதால் குமரி கண்ட நோய்களுக்கு குமரி கொடு என்பது வழக்கு.
முருங்கை
முருங்கைப்பட்டையை அரைத்து தடவினால் முறிந்த எலும்பு விரைவில் கூடும்; வீக்கத்தை குறைக்கும்.
முருங்கைகீரை கண்பார்வையை ஒழுங்குப்படுத்தும்; உடலை வலுவாக்கும்; கூந்தலை வளரச் செய்யும்.
கருவேப்பிலை
விஷக்கடிகளுக்கு நல்ல மருந்து; சீதபேதி குணமாகும்; உணவின் நச்சுத்தன்மையை நீக்கும்.
கரிசலாங்கண்ணி கீரை
வேறு பெயர்கள்: கரிசாலை, கையாந்தரை, பிருங்கராசம், தேகராசம்.
இரத்தசோகை, செரிமானக்கோளாறு, மஞ்சள்காமாலை முதலிய நோய்களுக்கு நல்ல மருந்து.
கண்பார்வையை தெளிவாக்கும்; நரையை போக்கும்.
மணித்தக்காளிக் கீரை வாய்ப்புண், குடற்புண்ணை குணமாக்கும்.
முசுமுசுக்கை இருமலை நீக்கும்.
அகத்திக்கீரை பல் சார்ந்த நோய்களை குணமாக்கும்.
வல்லாரை நினைவாற்றலை பெருக்கும்.
வேப்பங்கொழுந்து மார்புச்சளியை நீக்கும்.
வேப்பிலை அம்மையால் வந்த வெப்புநோயை அகற்றும்.






 
Top